Tuesday, March 6, 2018

குறையொன்றுமில்லை




“இரவு என்னம்மா சமையல்” என்று கேட்டபடி வந்தார் முருகானந்தம்.

 “இன்றைக்கு சீக்கிரமே வந்துவிட்டீர்களே அப்பா. ரசம் கொதிக்கிறது. சாதம் ஆக்கி, அப்பளம் பொரிக்க வேண்டும்” என்று சொல்லியபடியே அரிசியை களைந்து அடுப்பில் வைத்தாள் மாதவி.

 மகள் வேலை செய்வதை கவலையோடு பார்த்து கொண்டிருந்தார் அவர். யாரும் சாதாரணமாக பார்த்தால் தெரியாத மகளின் குறை, அவள் வேலை செய்யும் போது அப்பட்டமாக தெரிந்தது. மாதவி பிறந்த போது எல்லா குழந்தைகளையும் போலவே தான் இருந்தாள். வளர வளர தான் அவள் வலது கையை அதிகம் பயன்படுத்துவது இல்லை என கவனித்தனர் முருகானந்தமும் அவர் மனைவி வள்ளியும்.

 மாதவியை பரிசோதித்த டாக்டர், வலது கையின் மூட்டும், எலும்பும் சரியாக இணையவில்லை என்றும், அதற்கு எலும்பு சம்பந்தபட்ட நிபுணரிடம் காண்பித்து ஆலோசனை பெறும்படியும் கூறினார். அப்பொழுதே மாதவி நான்கு வயதை நெருங்கியிருந்தாள்.

 அந்த ஏற்பாட்டை கவனிக்க தொடங்கும் பொழுதுதான், வள்ளி மீண்டும் கருத்தரித்திருப்பது தெரிய வந்தது. மகளின் கவலையும், வயிற்றின் சுமையும் வள்ளியை பாடாய் படுத்தியது.

 “என்னங்க, எனக்கு உடம்புக்கு ரொம்ப முடியலைங்க. வாந்தியும் மயக்கமும் படுத்தி எடுக்குது. எதுமே சாப்பிட முடியலை. மாதவியையும் கவனிச்சிக்க முடியலை. படுக்கையே கதியா இருக்கேன்” என புலம்பினார்.

 “கவலைப்படாதே வள்ளி. காலையில் மட்டும் உனக்கு ஒத்தாசையா இருக்க வேலம்மாவை கேட்டிருக்கேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. என்ன இனிமே செலவுக்கு கொஞ்சம் கையை கடிக்கும். சமாளிச்சிரலாம்.”

 மறுநாளிலிருந்து வேலம்மா காலையிலேயே வந்து, வீட்டு வேலைகளை கவனித்து, இரு வேளைக்கும் சமைத்து, மாதவியையும் கவனித்துவிட்டு செல்வார். மாதங்கள் உருண்டோட, வள்ளி ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தார். வள்ளி உடம்பு தேறியதும், பிள்ளைகளையும் , வீட்டு பொறுப்புகளையும் மறுபடியும் கையில் எடுத்துக்கொண்டார்.

 அதற்குள் மாதவிக்கும் ஐந்து வயது பூர்த்தியாகி இருந்தது. மறுபடியும் எலும்பு நிபுணரை காண படையெடுத்தனர் இருவரும்.

“இங்க பாருங்க முருகானந்தம், ஆரம்பத்திலே நீங்க அழைச்சிட்டு வந்திருந்திங்கனா ஆப்பரேசன் செஞ்சு குணப்படித்திருக்கலாம். இப்போ எலும்புகள் உறுதியா ஆகிருச்சு. குணமாக்குறது கஷ்டம் தான்” என குண்டை தூக்கி இருவர் மண்டையிலும் போட்டார் அவர்.

 “டாக்டர், எங்க சூழ்நிலை இப்படி ஆயிருச்சி. வேற வழியே இல்லையா?” என டாக்டரின் கையைப் பிடித்து கொண்டு கலங்கினார் முருகானந்தம்.

 “கைக்கு சில பயிற்சிகள் கொடுத்து கொண்டே வந்தால் கொஞ்சம் மாற்றம் வர வாய்ப்பிருக்கு. நாங்கள் சொல்லி கொடுக்கும் பயிற்சியை விடாமல் தொடர வேண்டும். ஆரம்பத்தில் ரொம்ப வலிக்கும். நாளடைவில் பழகிவிடும்” என கூறி பயிற்சிகளையும் மாதவிக்கு செய்து காண்பித்தார்.

 கையைப் பிடித்து பளு தூக்கும் கருவியை அவள் கையில் வைத்து மேலும் கீழும் தூக்க வைத்தார்.

 “அம்மா கை வலிக்குதுமா, அப்பா! அப்பா! வேணாம்பா” என கதறினாள் மாதவி.

 மகளின் அழுகையை பொறுக்க முடியாத வள்ளி, டாக்டரின் பிடியிலிருந்த மாதவியை இழுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். முருகானந்தம்தான் டாக்டரிடம் மன்னிப்புக் கேட்டு , பணத்தையும் கொடுத்து விட்டு வந்தார்.

 “என்ன வள்ளி இப்படி பண்ணிட்டே கஷ்டபட்டு இந்த அப்பாயிண்ட்மேன்ட் வாங்கினேன். பாதியிலே வந்துட்டியே” என கடிந்து கொண்டார்.

 “பிள்ளை படற கஷ்டத்தை கண் கொண்டு பாக்க முடியலங்க. விடுங்க கை இப்படியே இருந்துட்டு போகட்டும். என் உயிர் உள்ளவரை இவள கண்ணுக்கு கண்ணா வச்சி நான் பாத்துக்குவேன்” என கண்ணீர் சிந்தினார் வள்ளி.

 “நீ இருக்கும் வரை பாத்துக்குவே, அதற்கு அப்புறம்” என மனதுக்குள்ளேயே புளுங்கினார் முருகானந்தம். பள்ளி செல்லும் வயதில் மாதவியை, அருகில் இருக்கும் பாலர் பள்ளிக்கு அனுப்பினர். இடது கை நார்மலாகவும், எலும்பு உடைந்தால் எப்படி மாவு கட்டு வைத்து கட்டி இருப்பார்களோ அதேபோல் 90 டிகிரிக்கு கீழே இறங்காத வலது கையை கொண்ட மாதவியை மற்ற குழந்தைகள் அதிசயமாக பார்த்தனர்.

ஆசிரியர் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது, மாதவியைப் பார்த்து குழந்தைகள் அனைவரும் கை கொட்டி சிரித்தனர்.

 “சார் இது பேரு வெறும் மாதவி இல்ல, ஒன்னே முக்கா கை மாதவி” என ஒரு குரும்புக்கார பையன் சொல்லியதில், மறுபடியும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இதை எல்லாம் கேட்க நேர்ந்த மாதவியோ கண்கள் கலங்கினாலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாகவே இருந்தாள்.

 பள்ளி முடிந்து வந்த மகள் அமைதியாகவே இருப்பதை பார்த்த வள்ளி “செல்லம்மா, என்னடா? புதுசா பள்ளிக்கு போனீங்களே புடிச்சிருக்கா?” என வினவினார்.

 தலையை மட்டும் ஆம் என ஆட்டிய மகள் சாப்பிடாமல் சென்று படுத்து கொண்டதை கவனித்த வள்ளி,

‘இருக்கட்டும் அவங்க அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்க. அவரிடம் மட்டும் தான் இந்த குட்டி வாயை திறக்கும்’ என எண்ணி கொண்டே வேலையை கவனித்தார்.

 மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த முருகானந்தம், சாப்பிடுவதற்கு மகளை எழுப்பினார். மகனுக்கு ஊட்டி முடித்த வள்ளி, கதவோரம் வந்து நின்று கொண்டார், அப்பாவும் மகளும் பேசுவதை கேட்க.

 “கண்ணு, எழுந்திரிமா. அப்பாவுக்கு பசிக்குது. நீங்க சாப்பிடாம, அப்பா எப்படி சாப்பிடறது?” என கொஞ்சினார். கன்னத்தில் கண்ணீர் கரையுடன் படுத்திருக்கும் மகளை பார்க்கும்போது பள்ளியில் என்ன நடந்திருக்கும் என அவரால் ஊகிக்க முடிந்தது. மகள் இதையெல்லாம் கடந்தே ஆக வேண்டும். இம்மெனுமுன் கண்ணீர் சிந்தினால், அவளால் இன்னும் வரும் இன்னல்களை சமாளிக்க முடியாது. தாம் இப்போது பேச போவதே மகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என அவர் உணர்ந்து கொண்டார்.

 மெதுவாய் எழுந்து அமர்ந்த மாதவி, தந்தையை இருக்கமாக கட்டிக் கொண்டாள்.

 “அப்பா, எனக்கு மட்டும் ஏன்பா கை இப்படி இருக்கு? என் கூட படிக்கிறவங்க கையெல்லாம் நல்லாயிருக்கு. எனக்கு மட்டும் ஏன்ப்பா இப்படி? தப்பு செய்யறவங்கள தான் சாமி தண்டிக்கும்னு அம்மா சொல்வாங்களே. நான் என்னப்பா தப்பு செஞ்சேன்? தம்பியோட மிட்டாயை பிடுங்கி சாப்பிட்டேனே அதுவாப்பா? இல்ல அம்மா சொல்ல சொல்ல கேக்காம ரோஜா செடியில பூத்த பூவெல்லாம் பிச்சிப் போட்டேனே அதுவா? இல்ல சாமி உண்டியல்ல போட சொன்ன காசை எடுத்து பிச்சைக்கார தாத்தாவுக்குப் போட்டேனே அதுவா? எதுனு சொல்லுங்கப்பா. நான் சாமிக்கிட்டே சோரி சொல்லுறேன். எனக்கு ஒன்னே முக்கா கை வேணாப்பா. முழு கையையும் குடுக்க சொல்லுங்கப்பா” என தேம்பி தேம்பி அழுதாள்.

 அழுதுகொண்டே குடுகுடுவென பூஜையறைக்கு ஓடினாள் மாதவி.

“சாமி, சாமி என்னை மன்னிச்சிரு சாமி. இனிமே நான் எந்த தப்பும் பண்ணமாட்டேன். என் கையை நல்லா ஆக்கிகுடு சாமி” என தலையை தரையில் முட்டிக்கொண்டு அழுதாள்.

மகள் அழுது கரைவதைப் பார்த்து வள்ளியும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.

 “என் மக இந்த பாடு படறாளே. இதையெல்லாம் நாங்க பாக்கனும்னு வைச்சிட்டியே. நீயெல்லாம் என்ன சாமி?” என நெஞ்சில் அறைந்து கொண்டு கதறியபடியே மயங்கினார் வள்ளி.

 மனைவியின் நிலைமையை கண்டு பதறிய முருகானந்தம், ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தார். நீர் தெளித்தும் வள்ளிக்கு மயக்கம் தெளியவில்லை. உடனே வேலம்மாவை அழைத்து பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு, வள்ளியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு பறந்தார்.

 அவரை பரிசோதித்த டாக்டர், ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்திருப்பதாக கூறி, அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். முருகானந்தம் கலங்கி போய் காரிடாரில் போட்டிருந்த நாற்காலியிலே இரண்டு நாட்களையும் கழித்தார். ஊரிலிருந்து வந்திருந்த அவரின் தங்கை பிள்ளைகளை கவனித்து கொண்டார்.

 மேலும் இரண்டு நாட்கள் ஐசியூவில் இருந்த வள்ளி, நினைவு திரும்பாமலே இறையடி சேர்ந்தார். டாக்டர்கள், ரத்த அழுத்தத்தால் நரம்பு பாதிப்பு என்றார்கள், குழந்தை பிறந்த பின்பு உடம்பை பேணவில்லை என்றார்கள், எந்த காரணமும் அவர் மூளைக்கு எட்டவில்லை. திக்பிரமை பிடித்த மாதிரி இருந்தார் முருகானந்தம். உறவுகாரர்களே எல்லா காரியத்தையும் செய்து முடித்தனர்.

காரியம் முடிந்து எல்லோரும் சென்ற பின்பும், அவர் தங்கை மட்டும் உதவிக்கு தங்கி இருந்தார். சமையலறையிலிருந்து மகள் விசும்பும் ஓசை கேட்டு, அங்கே எழுந்து சென்றார் முருகானந்தம்.

 “சாப்பிடேன்டி சனியனே! நீ பிறந்ததிலிருந்தே எல்லாருக்கும் கஷ்டம் தான். உன்னோட பீடை தான் எங்க அண்ணியை முழுங்கிருச்சி. இந்த கைய வச்சி இன்னும் யாரையெல்லாம் பாச கயிறு போட்டு இழுக்கப் போறியோ! எங்க அண்ணா கிட்ட சொல்லி உன்னைய முதல்ல தலை முழுக சொல்லணும். தரித்திரம்” என திட்டிக்கொண்டே உணவை ஊட்டிக்கொண்டிருந்தார் அவர் தங்கை.

 “கமலா! சின்ன குழந்தைகிட்ட என்ன பேசறதுனு இல்ல. விதி முடிஞ்சு அவ போயிட்டா. அதுக்கு இந்த சின்ன குருத்து மேல பழிய போடுறியே. நாளைக்கே நீ ஊர பாத்து கிளம்பு. என் குடும்பத்தை இனிமே எனக்கு பாத்துக்க தெரியும்” என ஒரு போடு போட்டார்.

 ஒடி வந்து கட்டிகொண்ட இரு செல்வங்களையும் கண்ணீர் வழிய அணைத்து கொண்டார் அந்த தாயுமானவர். இரு பிள்ளைகளையும் கவனித்து, பள்ளிக்கு அனுப்பி, வேலைக்கும் சென்று வந்தார் அவர். சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் வேலம்மாவை அமர்த்தினார். அவர் வீடு வரும் வரை பள்ளி சென்று வரும் பிள்ளைகளை வேலம்மா கவனித்து கொள்வார். முருகானந்தம், மகளின் தன்நம்பிக்கையை வளர்ப்பதற்கு, அவள் காரியங்களை சொந்தமாக செய்ய பழக்கினார்.

எழுதுவது, சாப்பிடுவது, வீட்டு வேலை செய்வது எல்லாம் இடது கையிலே பழகினாள் மாதவி. மற்றவர் கேலிகளையும், சீண்டல்களையும் புறம் தள்ள பழகினாள். தாயாக மாறி தம்பியை கவனித்து கொண்டாள். மெல்ல மெல்ல அந்த குடும்பமும் தலை எடுக்க துவங்கியது. மாதவி இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் ஆசிரியராக பணி புரிகிறாள். தம்பி பத்ரி பந்நாட்டு நிறுவனம் ஒன்றில் ஐடி துறையில் இருக்கிறான்.

 “என்னப்பா, ஒரே யோசனையாக இருக்கீங்க?” என கேட்டாள் மாதவி.

 மகளின் கேள்வியில் பழைய நினைவுகளிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தார் முருகானந்தம்.

 “ஒன்னும் இல்லம்மா, ஏதோ பழைய நினைவுகள். சரி அதை விடு. அப்பா சொன்னத யோசிச்சி பாத்தியாமா?” என கேட்டார்.

 “நல்லா யோசிச்சேன் பா. எனக்கு எது நல்லதுனு உங்களுக்கு தெரியும். உங்க இஷ்டபடி செய்யுங்கப்பா” என்றாள் மாதவி. திருமணத்தைப் பற்றி பேசினாலே பிடி கொடுக்காத மகள் சம்மதம் சொல்லவும், மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரே வந்தது அவருக்கு.

அறிவழகன் அவரது பால்ய சிநேகதரின் மகன்தான். மாதவியை விரும்பியே மணம் முடிக்க கேட்டவன். அவளின் சம்மதத்திற்காக இன்னும் காத்திருக்கிறான். தன்னைப் போலவே மகளை கண் கலங்காது வைத்து கொள்வான் எனும் நம்பிக்கை அவருக்கு உள்ளது. சந்தோஷமாக மகளை கட்டி கொண்டார்.

 “என்ன அப்பாவும் மகளும் ஒரேடியாக கொஞ்சிக்கிட்டு இருக்கிங்க? நானும் இந்த ஜோதியிலே ஐக்கியமாகிக்கிறேன்” என்று பத்ரியும் அவர்களை கட்டி கொண்டான்.

 ஒரு சுபநாள் சுபவேளையில், மாதவியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் அறிவழகன். மாலை மாற்றும்போது தடுமாறிய மாதவியின் கைகளைப் பற்றி தானே மாலையை அணிந்து கொண்டான் அறிவழகன். கண்ணீருடன் நிமிர்ந்த மாதவியைப் பார்த்து நானிருக்கிறேன் உனக்கு என கண்களை மூடி திறந்து தைரியமூட்டினான் அவன். அவர்களை கீழிருந்து பார்த்து கொண்டிருந்த முருகானந்தம் ஆனந்த கண்ணீர் சிந்தினார். அவர்கள் வாழ்வில் ஆனந்தம் என்றும் பெருகி வழிய வாழ்த்தி விடைபெறுவோம்.

2 comments:

  1. மிக அருமை டா...


    வாழ்த்துக்கள்...உன் புதிய தளத்திற்கு.....

    மென்மேலும் உன் எழுத்துப்பணி சிறக்கவும்....பல அழகிய கதைகள் எழுதி இந்த சமூகத்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தவும்

    மீண்டும் ஒரு சிறப்பு வாழ்த்து...

    அன்புடன்
    அனுபிரேம்

    ReplyDelete